நஞ்சுண்ட நாயகரின் நல்லருள் பெற்ற நற்சூதர்

வாய்மை வழுவாத நன்மக்களாகிய சான்றோர்களை உடையதாய் விளங்கிய வளநாடு தொண்டைநாடு ஆகும். ‘தெண்ணீர் வயற்றொண்டை, நன்னாடு சான்றோ ருடைத்து’ என்ற பழமொழி அதன் சிறப்பினை விளக்கி நிற்கும். அத்தகைய வளநாட்டில் வயல்களில் நல்ல முத்துக்களைக் கொண்டு வந்து சேர்க்கும் அளவிற்கு அலைகளையுடையதாய் ஓடியது பாலி ஆறாகும். அப்பாலி நதியின் வெள்ளப் பெருக்கினால் நீர் தெளிவின்றி வருதல் சில நாட்களே ஆகும். நீர் தெளிந்து வருதலே பல நாட்களாதலின் அதனைக் குறிக்கும் வண்ணம் ‘நித்தில வெண்திரைப் பாலி நதி’ எனக் குறிப்பார் சேக்கிழார்.

அப்பாலி நதியின் வடகரையில் அமைந்த நன்மையுடைய ஊர் திருவேற்காடு என்பதாகும். நன்மையல்லாத சூதினையும் நன்மையாய்ச் செய்துகொண்ட நாயனார் அவதரித்த தலம் என்றமையால் ‘நலங்கொள்பதி’ என்னும் சிறப்பினைத் தன்னகத்தே கொண்டமைந்தது இவ்வூர் ஆகும். இவ்வூரின்கண் அமைந்துள்ள ஆடரங்குகளில் மின்னுகின்ற கொடியைப் போன்ற பெண்களும் துகிற் கொடிகளும் விழாக்களின்போது ஆடிக்கொண்டிருக்கும் வகையில் அமைந்த சிறப்பினைக் கொண்டது திருவேற்காடாகும்.செம்பொன் அணிந்த மதிலையுடைய திருவேற்காட்டில் விரும்பியெழுந்தருளிய சிவந்த சடைக் கற்றையினையுடைய சிவபெருமான் தேவர்களுக்கு அமுதம் அளித்துத் தான் விடத்தை அமுதாக உண்ட அருமையைக் கொண்டவர் ஆவார்.

இதனுள் சேக்கிழார் சிவபெருமான் நஞ்சினைத் தான் உண்டு அமிழ்தினைத் தேவர்களுக்கு வழங்கிய செயலைக் குறித்தமைக்குக் காரணம் மூர்க்க நாயனாரும் தாம் மேற்கொண்ட சூதினால் வரும் தீமையினைத் தாம் ஏற்று, அதனால் ஆகிய பொருளைக் கொண்டு அடியவர்களுக்கு நலத்தினை அளித்த குறிப்பினைச் சுட்டுதற்காம். அத்தகைய சிவபெருமானுக்கு இவ்வுலகத்தில் இம்மையிலே வழி வழியாக வரும் அடிமைத் திறத்தினில் என்றும் வழுவாத தன்மையில் தொண்டு செய்து வருகின்ற வேளாளர் குலத்தில் தலைமையாகிய தன்மையைக் கொண்ட மூர்க்கனார் வாழ்ந்து வந்தார். இவரது இயற்பெயர் இன்னதென்று சொல்லப் பெறவில்லை. மூர்க்கர் என்பது பின்னர்ச் சரித்திர நிகழ்ச்சியினால் வந்தமைந்த காரணப் பெயர் ஆகும்.

பெரியபுராணத்தில் இயற்பகையார், மெய்ப்பொருளார், எறிபத்தர், நாளைப் போவார் போன்ற பெயர்களும் காரணப்பெயர்களாய் அமைந்தவை ஆகும். இயற் பெயர் வழங்காது காரணப் பெயர் வழங்குதல் ஒரு சிறப்பு என்க. இவ்வாறு வழிவழி வரும் பெருமையுடைய வேளாண் குடிகளின் சிறப்பே தொண்டைநாட்டிற்குச் சிறப்பாகும். குற்றமில்லாத மரபிலே பிறந்து வளர்ந்து அறிவு தெரிந்த நாள் முதலாக ஆதி முதல்வராகிய சிவபெருமான் மீது அன்பு பாராட்டி வந்தார் மூர்க்க நாயனார். இது முன்னைத் தவத்தால் வருவதாம். ‘பிறந்துணர்வு தொடங்கியபின்”(1052) என்றதும்

“பிறந்து மொழி பயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்து நின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
யெஞ்ஞான்று தீர்ப்ப திடர்” (அற்புதத் திருவந்தாதி)

– என்றதும், இவ்வாறு அமைந்ததேயாகும். மூர்க்க நாயனார் திருநீற்றின் சார்பே உண்மைப் பொருள் என்பதனை அறிந்து ஒழுகி வருபவரானார். திருநீற்று நெறி நிற்பதில் ஒழுகும் சைவநெறி பலவற்றுள்ளும் இந்நாயனார் சிறந்ததென மேற்கொண்டு ஒழுகியது இந்நியமம் என்பது இதன்வழி வெளிப்படும். திருஞானசம்பந்தரும்,

“மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே”
எனத்திருநீற்றின் சிறப்பினை விளக்கி

யுரைத்ததனை ஒப்பிட்டு அறிக. அடியவர்க்குள் நின்று
சிவனே உண்கின்றார் என்பது சிவாகம ஆணையாதலின்,
“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே” (திருமந்திரம்)

என்பதனைக்கருத்தில் கொண்டு சிவபெருமான் அடியார்களுக்கு அமுது ஆக்கி, அவர்கள் முன்னே அமுதுண்ணக்கண்டு அதன்பின் தாம் உண்ணும் நீதிமுறை தவறாத நியமத்தினை மேற்கொண்ட தன்மையினை உடையாராய் மூர்க்க நாயனார் விளங்கினார். தூய்மையுடைய அன்னமும், சுவையுடைய இனிய கறிகளும் நன்கு சமைத்து வருகை தந்த அடியார்களை எல்லாம் உபசரித்து முகமன் கூறி விருப்புடனே அமுது செய்வித்தார்.

மேலும் அடியார்களுக்குத் தேவையான ஏனையப் பொருட்களையும் வேண்டியவாறே உதவி அன்பு மிகவும் பொருந்தும்படி நாள்தோறும் இத்தகைய பணியினைச் செய்து இன்பமடைந்தார். பணி செய்தலின்கண் அது கண்டு இன்புறும் தன்மையே மிகச் சிறப்புடைத்தாம். இதனை “அமுது செய்யப்பெற்று இங்கு அவர்தம் மலர்ந்த முக நன்று காண்பது” எனச்சிறுத்தொண்டர் புராணத்துள்ளும் வைத்துரைப்பார் சேக்கிழார் பெருமான். இதனை வள்ளுவரும் “ஈத்துவக்கு மின்பம்” எனக் குறித்துப் போற்றுவார். மூர்க்க நாயனார் இவ்வாறு அடியார்களை உபசரித்ததை,

“கோதின் மரபிற் பிறந்துவளர்ந் தறிவு கொண்ட நாட்டொடங்கி
ஆதி முதல்வர் திருநீற்றி னடைவே பொருளென் றறிந்தரனார்
காத லடியார்க் கமுதாக்கி யமுது
செய்யக் கண்டுண்ணும்
நீதி முறைமை வழுவாத நியதி பூண்ட நிலைமையார்”
எனக் குறிப்பார் சேக்கிழார் பெருமான்.

இவ்வாறாகிய செய்கை செய்து வரும் நாளில் அடியார்கள் மிகுதியாக எழுந்தருளியபடியினால் அவர்களுக்கு உணவளித்து உபசரிக்க முன்னே தமது உடைமையாயின பொருட்கள் முழுதும் தீர்ந்துபோக, சேமநிதிகளும் தம் முன்னோர் தேடி வைத்தனவாகிய பொருட்கள் முழுதும் தீர்ந்து போயின. தம் வசம் பொருளாக உள்ளனவற்றைத் தாமே முன்னர்ச் செலவிட்டும், பின்பே அவ்வாறல்லாதவற்றை விற்றுச் செலவிட்டும் நிகழ்தல் உலக இயல்பே ஆகும்.

மூர்க்க நாயனாரும் நிலைபெற்ற காணியான நிலமும் மற்றும் உள்ள திறங்களை எல்லாமும் விற்று அன்னம் அளித்தலை விடாது மகிழ்ச்சி மிக்க மனத்தையுடையவராய்ச் செய்து வந்தார். எல்லாவற்றையும் விற்றுச் செலவழித்ததற்குப் பின் அடியார்களுக்கு அமுதாக்குதற்கு அந்நாளில், அவ்வூரில் தமக்கு வழியும் இல்லாத நிலையில் வறுமை வயப்பட்டு பெரிதும் மயங்கினார். எனவே தான் முன்னால் கற்றுத் தற்பொழுதும் மறவாது இருக்கும் நற்றன்மையுடைய சூதினாலே மிகும் பொருள் ஆக்க முயற்சித்தார். ஆனால் ‘தீய வென்பன கனவிலும் நினைவிலாச் சிந்தைத், தூய மாந்தர்வாழ் தொண்டைநாட்டியல்பு” (1123) என்பதனால் அவர் வாழ்ந்த ஊரில் சூதாட்டம் செய்வாரில்லாமையால் பிற ஊர்களுக்குச் செல்வாரானார்.

ஐம்பெரும் பாதகங்களுள் ஒன்றாக வைத்தெண்ணி விலக்கப்படுவது சூதாகும். சூதினால் ஒருமுறை வரும் பொருட்களின் மிகுதி நோக்கியே மக்கள் சூதினில் ஆசைப்பட்டு மயங்கித் தம் பொருள் எல்லாம் இழந்து கேடுறவும் முற்படுகின்றாராதலின், முதலிற், பொங்குவதாகக் காட்டும் என்றும், கெட்ட ஆசை பொங்கும் என்றும் பலவாறு விளக்கவே ‘பொங்கும் பொருளாக் கவுமங்குப் பொருவாரின்மை யினிற்போவார்’ எனக் குறித்தார் சேக்கிழார். மூர்க்கர் இளம்பிராயத்தில் கலை ஞானங்களுள் ஒன்றாகச் சூதினைக் கற்றார் எனினும், அதனைப் பொருள் ஈட்டப் பயன்படுத்தவில்லை என்பது இதனால் வெளிப்படும். மேலும் சூது என்பதனைக் கற்றாலும் அதனால் ஆய தீமை அணுகாவண்ணம் இருந்தமையாலும் தற்பொழுது அதனைச் சிவனடியார்க்கு அமுது ஆக்கவுமே பயன்படுத்தியமையால் இதனை ‘நற்சூது’ எனக்குறித்தார் சேக்கிழார்.

மூர்க்க நாயனார் சூதாடிப் பொருள் ஈட்ட பிற ஊர்களுக்குச் சென்றார். எனினும் செல்லும் இடங்களில் எல்லாம் சிவபெருமான் ஆலயம் சென்று வணங்கினார். இவ்வாறு தாம் கற்ற நற்சூதினால் வரும் பொருளினைக்கொண்டு நியதியாகிய தமது கருமத்தினை முடித்துக் கொண்டவாறே பகைவர்களது முப்புரங்களை அழித்த வில்லினையுடைய சிவபெருமான் உறைந்து அருள் பாலிக்கும் திருக்குடந்தைப் பதியினைச் சிலநாளில் வந்து அடைந்தார். திருக்குடந்தை அந்நாளிலும் சூதாட்டம் முதலியவற்றாலும் சிறந்து விளங்கிற்றுப்போலும்; இதனை, ‘பொருளாய மெய்துதற்குப்புகழ்க்குடந்தையம்பலத்தே, யுருளாய்ச்சூதாடி’ (3625) என்னும் கருத்தும் விளக்கி நிற்கும்.

நீலம் நிறைந்த அழகிய கண்டத்தினை உடைய சிவபெருமானுடைய அடியவர்களுக்கு இனிய திருவமுது அளிப்பதற்காகப் பொருளீட்டம் பொருந்துதற்கு முதல் ஆட்டத்தில் தாம் தோல்வியை ஏற்று முதற்பந்தயப் பணத்தை எதிர்த்து ஆடுபவர் பெறுமாறு செய்து, பின்பு ஆடும் சூதாட்டத்தில் பலமுறையும் தாமே வென்று பெரும் பொருளைத் தமதாக்கி; வஞ்சச்சொற்களால் மறுத்தவர்களை உடைவாளுருவிக் குத்தி வெற்றி கண்டார். எனவே, நற்சூதராகிய இந்நாயனார் நானிலத்தில் ‘மூர்க்கர்’ என்னும் பெயர் பெற்றார். சூதாட்டத்தினில் வெற்றிகொண்டு பொருந்தும் பொருள் குற்றமற்ற நல்லுணர்வின் பயனாகத் தீமை நீங்க தம் கையாலும் தீண்டாது அமுது ஆக்குவோர்கள் கைக்கொள்ளச் செய்து காதலுடன் அமுது செய்து வந்தார்.

பின்னர் பெருவிருப்பத்துடனே அடியார்கள் அமுது செய்ததற்குப் பின் கடைப்பந்தியில் இருந்து தாமும் அமுதுண்டு வந்தார். இவ்வாறு குடந்தையில் தங்கியிருக்கும் நாட்களிலே, தனக்கென்று செயல் ஒன்றுமில்லாது இறைப்பணி நிற்கும் அடியவர் செய்கைகளைத் தம் செயலேயாக்கி வாழ்ந்து வந்தார். சிவபெருமானுடைய அடியவர்களுக்கு நல்ல திரு அமுதினை நாடோறும் அன்போடும் அமுது செய்வித்து அத்தகைய நற்செயலால் இறைவன் திருவருளால் குற்றங்கள் நீங்கப்பெற்றதனால் இவ்வுலகை விட்டபின்பு பூதகணங்கள் சூழ்ந்து இசைபாட ஆடுகின்ற சிவபெருமானது உலகமாகிய சிவபுரத்தினிற் புகுந்தமர்ந்தார்.

சூதாடுபவர்களை வெற்றிகொண்டு, சூதினால் வந்த பொருட்களையெல்லாம் கருமை பொருந்திய விடமுடைய கண்டராகிய சிவபெருமானது அடியவர்களுக்கே திருவமுதுக்கு ஆக்குகின்ற நல்லாராதலின் நற்சூதர் எனப் பெறும் மூர்க்கரது திருவடிகளை நான் வணங்குகின்றேன் எனக் குறித்துரைப்பார் சேக்கிழார் பெருமான்.

Author: sivapriya