“ஒரு வாக்கு பெற்ற கோவை நபருக்கு எதிர்காலத்தில் வாய்ப்பளிக்கப்படும்” – அண்ணாமலை பேட்டி

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டு ஒரு வாக்குப்பெற்ற கோவை நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த 13 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரியநாயக்கன் பாளையம் ஓன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு உறுப்பினருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகின.

இந்த வார்டில் மொத்தம் 1551 வாக்குகள் இருக்கும் நிலையில் 913 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது. இதில் திமுக சார்பில் கட்டில் சின்னத்தில் போட்டியிட்ட அருள்ராஜ் என்பவர் 387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட வைத்தியலிங்கம் 196 வாக்குகள் பெற்றுள்ளார்.

இதே போல பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக், கார் சின்னத்தில் போட்டியிட்டு இருந்த நிலையில் ஓரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார். இதே போல தேமுதிக சார்பில் பெயின்டிங் பிரஸ் சின்னத்தில் போட்டியிட்ட ரவிக்குமார் 2 வாக்குகள் மட்டுமே பெற்றார். பா.ஜ.க சார்பில் போட்டியிட்ட கார்த்திக் 4 வது வார்டை சேர்ந்தவர் என்பதால் அவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாருக்கும் அந்த வார்டில் வாக்குகள் இல்லை. 1551 பேர் கொண்ட 9 வது வார்டில் வாக்கே இல்லாத பா.ஜ.க வேட்பாளர் கார்த்திற்கு ஓரே ஒருவர் வாக்களித்து இருப்பது குறிப்பிடதக்கது.

இதனிடையே, ஒரே ஒரு வாக்கு பெற்ற பாஜகச் சேர்ந்தவர் குறித்து சமூக வலைதளங்களில் செய்திகள் வைரலாக மதியம் முதலே பகிரப்பட்டு வந்தது. நீண்ட நேரம் ட்விட்டர் ட்ரெண்டிங்கிலும் இருந்தது. மேலும், தன்னைக் குறித்த தவறான தகவல்கள் பரப்பட்டு வருவதாக பாஜகவின் கார்த்திக்கும் பேட்டி அளித்து இருந்தார். தவறான கருத்துக்கள் பரப்புவோர் மீது வழக்கு தொடரப்படும் என்றும் கூறியிருந்தார்.

Image

இந்நிலையில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநரை நேரில் சந்தித்தார். தமிழகத்தில் நடக்கும் வன்முறை மற்றும் ஆணவக் கொலைகளை கண்டித்து உறுதியான நடவடிக்கை எடுக்க கோரியும் திமுக எம்பிக்கள் சம்பந்தப்பட்டுள்ள கொலை வழக்குகளில் நியாயமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆளுநரிடம் அவர் மனு அளித்தார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒரு வாக்குப்பெற்ற நபருக்கு எதிர்காலத்தில் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Author: admin