சென்னையில் பைக்கில் சென்றவர் நிலைதடுமாறி மின்சாரப் பெட்டியில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை அடையாறில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வங்கி ஊழியர் நிலைதடுமாறி மின்சாரப் பெட்டியில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.
சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சதீஷ், பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கித் தலைமையகத்தில் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் தற்காலிக ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். நேற்றுப் பணிமுடிந்து நண்பர் அரவிந்தனுடன் இருசக்கர வாகனத்தில் அடையாறு சிக்னல் அருகே வந்தபோது, சாலையில் தேங்கிய மழை நீரில் இரு சக்கர வாகனம் இறங்கியது. அப்போது நிலை தடுமாறிய சதீஷ் அருகே இடப்புறம் இருந்த மின்சாரப் பெட்டியில் கை வைத்ததில் மின்சாரம் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
அவரைப் பொதுமக்கள் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே, இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இது குறித்து அடையாறு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் பின்னால் இருந்த நண்பர் வலப்பக்கமாக விழுந்ததால் உயிர்தப்பினார். மழைக்காலத்தில், மின்மாற்றிகள் அருகில் செல்லவோ, மின்சார பெட்டிகளை தொடுவதோ கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Author: admin